ஈராக்கின் சர்வாதிகாரி, ஈராக்கில் உள்ள ஷியா, குர்து இன மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்த கொடுங்கோலன்'' இவைதான் மேற்குலக நாடுகள் சதாமை வர்ணித்த வார்த்தைகள். சதாம் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு வசதியாக பேரழிவு ஆயுதங்கள் பலவற்றை ஈராக் வைத்திருக்கிறது என்ற குற்றம் சுமத்தப்பட்டது.ஆனால் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கூறப்பட்ட குற்றச் சாட்டு சற்றும் எதிர்பாராதது. 1982ஆம் ஆண்டு 148 ஷியா இன மக்களைக் கொலை செய்ததாலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1988ஆம் ஆண்டு விஷவாயு மூலம் 5 ஆயிரம் பேரைக் கொலைசெய்தது, குவைத்தை ஆக்கிரமித்தது, மதச்சார் பற்ற மதரீதியான கட்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டது, வடக்கு ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைத் துரத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம், அவை பற்றிய விசாரணைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக்குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்பட முன்னரே சதாம் ஹுசைனுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்கப் படையினால் கைதுசெய்யப்பட்ட சதாம் ஹுசைனை ஈராக்கிய நீதிமன்ற
ம் விசாரிக்கும் என்ற அறிவிப்பு வெளிவந்த உடனேயே சதாமின் மரணதண்டனை
ஊர்ஜிதமானது. சர்வதேச நீதிமன்றத்தின் முன் சதாம் ஹுசைனை நிறுத்தியிருந்தால் அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்திருப்பார். அந்தப் பதில் சில வேளையில் அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும்.
இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஜி படைத்தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூசெம்பர்க் நீதிமன்றம் குற்றவாளிகள் தமது தரப்பு நியாயத்தைக்கூற சந்தர்ப்பமளித்தது. ஈராக்கில் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் வழங்கப்படவில்ல. சதாமின் வாதத்தையைச் கேட்பதற்கு ஈராக் நீதிமன்றம் தயாராக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதிலேயே ஈராக் நீதிமன்றம் உறுதியாக இருந்தது.
ஈராக் மீதான படையெடுப்பு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பிரதமர் பிளேயர் பதவி விலகும் நிலையை ஈராக் படையெடுப்பு உருவாக்கியது. அதேபோல் புஷ்ஷின் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடையவும் ஈராக் படையெடுப்பு காரணமானது. சதாமின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட மிகமோசமான நிலையில் இன்று ஈராக் உள்ளது.
ஈராக்கில் தினமும் சராசரியாக 100 பேர் மரணமடைகின்றனர். எப்போது குண்டு வெடிக்கும், எப்போது கைது செய்யப்படுவோம் என்ற மரண அச்சத்துடனேயே ஈராக் மக்கள் வாழ்கின்றனர்.
சர்வாதிகாரி சதாமிடமிருந்து ஈராக்கை மீட்கப் புறப்பட்ட அமெரிக்காவின் தலைமையிலான படை ஈராக்கைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. சதாம் மரணமானால் வன்செயல் அதிகரிக்கும் என்பது வெளிப்படை.
ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று
அமெரிக்காவில் கோசம் எழுந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைத்து
நிற்கவேண்டுமானால் அங்கு வன்செயல்கள் அதிகளவில் நடைபெறவேண்டும். சதாமின் மரணம் ஈராக்கில் வன்செயலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்ல. சதாமின் எதிரி
யான ஷியா இன மக்களின் முன்னிலயிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில் தனது எதிரிகளை தூக்கில் போட்ட அதே சிறைக்கூடத்திலேயே தானும் ஒருநாள் தூக்கில் தொங்குவேன் என சதாம் ஹுசைன் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
அமெரிக்காவின் துணையுடன் ஈரானில் அட்டூழியம் புரிந்த சதாமுக்கு அதே அமெரிக்காவின் துணையுடன் அவரது பரம எதிரிகள் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிடம் அடிமைப்பட்டிருக்கும் ஈராக்கில் தனது உடல் புதைக்கப்படக்கூடாது என்று சதாம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. சதாமின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட ஷியா குர்துஇன மக்களின் உறவினர்கள் சதாம் தூக்கில் தொங்கி உயிரிழப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.ஷியா மக்களின் வலிமைமிக்க தலைவரான "முக்டதா'என்பவரின் பெயர் சதாமுக்கு முன்னால் உச்சரிக்கப்பட்டது. ஈராக்கின் மூலைமுடுக்கெல்லாம் தனக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அழித்தொழித்த சதாம் தன் முன்னால் தனது அரசியல் எதிரியான முக்டதாவின் ஆட்கள் இருப்பதை அப்போது தான் அறிந்து கொண்டார். ஈராக்கை கட்டியாண்ட சதாமின் கரங்களில் இறுதிவரை இருந்த குரானும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. தன்னைஎதிர்த்தவர்களை அடக்கி ஒடுக்க உத்தரவு போட்ட கரங்கள் செயலிழந்தன.மரணப் பாதையை துணிந்து தேர்ந்தெடுத்த சதாம் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகி "யா அல்லா' என்றார். ஷகாதாவை உச்சரித்தபடி அவரது உயிர் பிரிந்தது.
மரணதண்டனை கைதியின் முகத்தை மூடுவதுதான் வழமை. தனது மரணத்தின்போதும் முகத்தை மூடக்கூடாது என்று சதாம் ஹுசைன் கூறியதால் அவரது முகம் மூடப்படவில்லை. மரணதண்டனையை நிறைவேற்றியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
விசைப் பலகை இழுக்கப்பட்டதும் அவரது கால்களைத் தாங்கி இருந்த பலகை விலகியது. கை, கால்களில் சிறு அசைவுகூட இல்லாமல் உயிர் பிரிந்தது.அரபு உலகில் வெள்ளிக்கிழமைதான் மரணதண்டனை வழங்கப்படும். சட்டப் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமை தண்டனை வழங்க முடியவில்லை. சதாமின் சொந்த ஊரான அவ்ஜாவில் அவரது உடலை அடக்கம் செய்ய ஈராக் அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் சதாமின் உடல் ஹெலிகொப்டர் மூலம் திக்ரிக் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நகரின் அருகில்தான் அவ்ஜா நகர் உள்ளது. சதாமின் ஆட்சிக் காலத்தில் மதப்பண்டிகைகளுக்காக கட்டப்பட்ட எண்கோண மண்டபத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஞாயிறு காலையில் பொழுது விடியத்தொடங்கியதும் அணி அணியாகத் திரண்ட மக்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்தனர். சதாமின் கல்லறை புண்ணிய ஸ்தலமாக மாறியது. ஈராக்கில் நுழைந்த அமெரிக்காதான் நினைத்ததை தனது பொம்மை அரசைக் கொண்டு செய்து முடித்துள்ளது.
- அம்ஜத் அலி கான்
0 Comments:
Post a Comment